கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் கடந்த 24 மணித்தியாலங்களில் அவசர உதவி கோரி வரும் அழைப்புகளின் எண்ணிக்கை வழமையை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ தீயணைப்புப் படை (Toronto Fire Services – TFS) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 622 அவசர சம்பவங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலிலும், அழைப்புகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட பணியாளர்களின் அர்ப்பணிப்பை தீயணைப்புப் படைத் தலைவர் ஜிம் ஜெஸப் (Jim Jessop) பாராட்டியுள்ளார்.
இருப்பினும், அவசர அழைப்புகள் திடீரென இந்த அளவுக்கு அதிகரித்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் அவை எவ்வகையான அவசர அழைப்புகள் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.










