கனடாவின் மிகப்பெரிய பாடசாலை சபையான டொராண்டோ மாவட்ட பாடசாலை சபை (TDSB), எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சுமார் 289 ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை குறைந்து வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள சபை, சுமார் 5,000 மாணவர்கள் குறையக்கூடும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக இருக்கும் என டொராண்டோ ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் (ETT) எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மாதிரிப் பாடசாலைகள் (Model Schools), ஆங்கிலம் கற்கும் மாணவர்கள் (ESL) மற்றும் நூலகர்களுக்கான பணியிடங்கள் இதில் அதிகம் பாதிக்கப்படும் என சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவானது வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாணவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளைக் குறைக்கும் என சங்கத் தலைவர் ஹெலன் விக்டோரோஸ் (Helen Victoros) தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பால் கலான்ட்ரா (Paul Calandra) தலைமையிலான மாகாண அரசாங்கம், போதிய நிதி வழங்காமல் பொதுக் கல்வியைச் சீர்குலைப்பதாக எதிர்க்கட்சியான NDP மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த ஆசிரியர் குறைப்பு நடவடிக்கைகள் மிகவும் ரகசியமான முறையில் எடுக்கப்படுவதாகவும், இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்










