ஈரான் (Iran) நாட்டில் நடைபெற்று வரும் போரை நிறுத்தி, அங்கு நிலவும் மோதல் சூழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென என மேனிடோபா (Manitoba) மாகாண முதல்வர் வப் கினியூ (Wab Kinew) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தப் போர் முட்டாள்தனமானது” (Dumb war) எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வினிபெக்கில் (Winnipeg) நடைபெற்ற என்.டி.பி (NDP) தேசிய மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு சாடியுள்ளார்.
இந்தப் போர் சர்வதேச அளவில் மனிதப் பேரழிவை ஏற்படுத்துவதுடன், கனடா மற்றும் வட அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்தப் போரில் நேட்டோ (NATO) படைகளின் உதவியைக் கோரியுள்ள நிலையில், கனடிய வீரர்கள் எவரையும் இந்தப் போரில் ஈடுபடுத்தக் கூடாது என வப் கினியூ (Wab Kinew) எச்சரித்துள்ளார்.
“மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த எந்தவொரு கனடியரோ அல்லது அமெரிக்கரோ இந்தப் போருக்காகத் தங்களின் உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை; இந்தப் போரை உருவாக்கிய செல்வந்தர்களே அதை எதிர்கொள்ளட்டும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
