பயணிகளின் பொருட்களில் போதைப்பொருள் – ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுப்பதாக கனேடியர்கள் குற்றச்சாட்டு!

கனடாவில் (Canada) விமான நிலையங்களில் பயணிகளின் சாமான்களில் ஒட்டப்படும் அடையாள அட்டை (Baggage Tag) மாற்றப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் அப்பாவி பயணிகள் சிக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் இவ்வாறான 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக CTV ஊடக நிறுவனத்தின் W5 புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

றொரண்டோவைச் (Toronto) சேர்ந்த கிரேஸ் (Grace) என்ற 66 வயது பெண்மணி, கேத்தே பசிபிக் (Cathay Pacific) விமானம் மூலம் மணிலா (Manila) சென்றிருந்த போது இவ்வாறான பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளார்.  

அவரது பொருட்களுக்கான அடையாள அட்டை 24 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் இருந்த வேறொரு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்தது.

இதனால், அவர் 24 நாட்கள் பிலிப்பைன்ஸ் சிறையில் அடைக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதேபோல் ஜப்பான் சென்ற ஏர் கனடா (Air Canada) பயணி ஒருவரும், மெக்சிகோவிலிருந்து திரும்பிய ஏர் ட்ரான்ஸாட் (Air Transat) பயணி ஒருவரும், வெஸ்ட்ஜெட் (WestJet) பயணி நிகோல் (Nicole) மற்றும் வின்னிபெக்கைச் (Winnipeg) சேர்ந்த ஜான் (Jan), சார்லீன் (Charlene) ஆகியோரும் இத்தகைய மாபியா கும்பலின் சதியால் போலி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் சட்டச் செலவுகள் மற்றும் மாற்று விமானக் கட்டணங்களுக்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளனர்.

பொருட்களை ஒப்படைத்த பின் அதற்கு விமான நிறுவனங்களே பொறுப்பு என்று பயணிகள் வாதிடும் நிலையில், ஏர் கனடா, கேத்தே பசிபிக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு நிதியுதவி வழங்கவோ, முழுப் பொறுப்பேற்கவோ மறுத்து வருகின்றன.

றொரண்டோ பியர்சன் (Pearson) விமான நிலையத்தில் சாமான்களைக் கையாளும் ஊழியர்கள் சிலர் இந்த மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles