வகுப்பறைகளில் மாணவர்கள் சின்னச் சின்னக் குறும்புத்தனங்களையும், புகார்களையும் ஆசிரியர்களிடம் அடிக்கடி கூறி தொந்தரவு செய்வதைத் தவிர்க்க, அண்மைக் காலமாக ‘டாட்டில் போன்’ (Tattle Phone) எனப்படும் போலி தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டிக் டாக் (TikTok) சமூக வலைத்தளத்தில் ‘Miss Hoffman’ என்ற ஆசிரியர் பகிர்ந்த இந்த முறை தற்போது வைரலாகி வருகிறது.
குழந்தைகள் தங்களின் புகார்களை இந்த போலி போனில் பேசி பதிவு செய்து கொள்ளலாம்.
இது ஆசிரியர்களின் சுமையைக் குறைப்பதாகக் கூறப்பட்டாலும், நிபுணர்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இது குறித்து University of Toronto பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘Dr. Todd Cunningham’ கூறுகையில், “எந்தெந்தப் பிரச்சினைகளை தாங்களாகவே தீர்க்க வேண்டும், எவற்றை பெரியவர்களிடம் கூற வேண்டும் என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள இது உதவும். ஆனால், இதன் பதிவுகளை ஆசிரியர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
இருப்பினும், ‘Institute of Child Psychology’ அமைப்பின் இணை நிறுவனர் ‘Tania Johnson’, இது ஒருபோதும் ஆசிரியரின் இடத்தை நிரப்ப முடியாது என்றும், குழந்தைகளின் சமூகத் தொடர்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கிறார்.
York University பேராசிரியர் ‘Natalie Coulter’ இந்த பதிவுகளின் தனியுரிமை (Privacy) மற்றும் சமூக வலைத்தளப் பகிர்வு குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
Western University பேராசிரியர் ‘Dr. Emma Duerden’ கூறுகையில், பெரிய வகுப்பறைகளைச் சமாளிக்க இது உதவினாலும், குழந்தைகளின் உணர்ச்சி முகாமைத்துவத்திற்கு பெரியவர்களின் நேரடி வழிகாட்டுதலே அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.










