கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழர் நாயாறு கடலில் மூழ்கி உயிரிழப்பு!

கனடாவில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தாயகத்திற்கு சென்றிருந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனவும், கனடாவில் வசித்து வந்த அவர் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஓகஸ்ட் 16ஆம் திகதி முல்லைத்தீவு நாயாறு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் முல்லைத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அவர் நாயாறு கடலில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில தமிழ் ஊடகங்கள் உயிரிழந்தவரை “சதீசன்” என அடையாளப்படுத்தியுள்ளன. அவர் கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னரே இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

நண்பகல் வேளையில் நண்பர்களுடன் நாயாறு கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டபோதும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு நீரில் மூழ்கினார் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles