ATM-ல் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டது.. ஆனால் பணம் வெளிவரவில்லையா? அது இயந்திரக் கோளாறு மட்டுமல்ல — ஒரு மோசடியாகவும் இருக்கலாம்!
York Region-ல் ATM இயந்திரங்களில் “Cash Trap” சாதனங்களை பொருத்தி பணத்தை திருடியதாகக் கூறப்படும் இரண்டு ருமேனிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
York Regional Police தகவல்படி, ஜூன் 17 முதல் ஜூலை 27, 2026 வரை 14 Cash Trap சம்பவங்கள் நிதி நிறுவனங்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடி மிகவும் எளிமையான முறையில் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபர்கள் ATM-இன் பணம் வெளிவரும் பகுதியில் இருபக்கமும் ஒட்டக்கூடிய adhesive tape-ஐ பொருத்தியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர் எடுத்த பணம் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ வெளியே வராமல் உள்ளேயே சிக்கிக்கொள்ளும்.
பணம் வராததால் ATM-ல் கோளாறு ஏற்பட்டிருப்பதாக நினைத்து வாடிக்கையாளர் அங்கிருந்து சென்ற பின்னர், சந்தேகநபர்கள் மீண்டும் வந்து அந்த இடத்தில் சிக்கியிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விசாரணையின் பின்னர் ஆகஸ்ட் 6ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பெருமளவான double-sided tape மற்றும் Cash Trap சாதனங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உலோகத் துண்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
41, 52 வயதான இரண்டு ருமேனிய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ATM-ல் நீங்கள் கேட்ட தொகையைவிட குறைவான பணம் வந்தாலோ அல்லது பணமே வராமல் போனாலோ, உடனடியாக அங்கிருந்து செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
உங்கள் வங்கியை உடனடியாக தொடர்புகொண்டு சம்பவத்தை அறிவியுங்கள். ATM சந்தேகத்திற்கிடமாகத் தெரிந்தால் பொலிஸாருக்கும் தகவல் வழங்குங்கள்.










