ஒட்டாவா (Ottawa) நகரில், கனடிய வருவாய் முகமையின் (Canada Revenue Agency – CRA) 12 மில்லியன் டொலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை, அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிவர்சல் புரொடக்ஷன் சர்வீஸ் ஆஃப் கனடா கோர்ப் (Universal Protection Service of Canada Corp) கைப்பற்றியுள்ளது.
கனடிய முன்னாள் ராணுவத்தினருக்குப் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கம் கொண்ட கமிஷனெர்ஸ் (Commissionaires) என்ற இலாபநோக்கற்ற கனடிய பாதுகாப்பு நிறுவனம், வெறும் 0.8 சதவீத விலை வித்தியாசத்தால் இந்த ஒப்பந்தத்தை இழந்துள்ளது.
இந்த முடிவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் எம்.பி மைக்கேல் பாரெட் (Michael Barrett) கொண்டு வந்த முன்மொழிவு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கனடிய வருவாய் முகமைக்கான இணை அமைச்சர் வெய்ன் லாங் (Wayne Long), ஒப்பந்தப் புள்ளிகள் தேர்வு அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக நடைபெறுவதாகவும், கனடிய நிறுவன முன்னுரிமைக் கொள்கைகளின் படியே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 8,000 பணியாளர்களையும், அதில் 2,000 முன்னாள் ராணுவத்தினரையும் கொண்டிருக்கும் கமிஷனெர்ஸ் நிறுவனம், எதிர்கால கூட்டாட்சி ஒப்பந்தங்கள் தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
