அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் முற்றுகை காரணமாக கியூபாவில் (Cuba) கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கனடிய விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான விமானச் சேவைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளதால், வழக்கமாக அங்கு செல்லும் கனடிய சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குளிர்கால விடுமுறையைக் கழிப்பதற்கு மிகவும் மலிவான இடமாக கியூபா இருந்து வந்த நிலையில், தற்போது விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கனடியர்கள் மெக்சிகோ (Mexico), டொமினிக்கன் குடியரசு (Dominican Republic), ஜமைக்கா (Jamaica) போன்ற அதிக செலவு பிடிக்கும் பிற கரிபியன் நாடுகளை நோக்கித் தங்கள் பயணங்களைத் திருப்பி வருகின்றனர்.
ஃப்ளைட் சென்டர் கனடா (Flight Centre Canada) மற்றும் டர்ஹாம் டிராவல் (Durham Travel) ஆகியவற்றின் தகவல்களின்படி, கியூபாவில் $1,400 டாலருக்குக் கிடைத்த விடுமுறைத் தொகுப்புகளுக்குப் பதிலாக, தற்போது பிற நாடுகளில் $1,800 டாலருக்கும் அதிகமாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு முன்னர் ஆண்டுதோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான கனடியர்கள் கியூபாவிற்குச் சென்றிருந்த நிலையில், தற்போதைய பொருளாதாரத் தடைகள் மற்றும் பயண எச்சரிக்கைகள் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
