கியூபெக் மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிநாட்டு ஆதரவு தலைவருக்கு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி புதிய முதல்வர் (Premier) பொறுப்பேற்றுள்ள ‘பார்த்தி கெபெக்குவா’ (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டனுக்கு (Paul St. Pierre Plamondon) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்று வாரங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், கியூபெக் தேர்தல் வெற்றி கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) பின்னடைவு எனக் குறிப்பிடும் செய்தி ஒன்றையும் இணைத்துள்ளார்.

கியூபெக் தனிநாடாகப் பிரிவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு (Referendum), டிரம்ப் 2029 ஜனவரியில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வரை நடத்தப்படாது எனப் புதிய பிரதமர் முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் 28 சதவீத வாக்குகளுடன் 60 இடங்களை ‘பார்த்தி கெபெக்குவா’ கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 64 இடங்களை அடைவதற்கு 4 இடங்கள் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles