ஸ்கார்பாரோ (Scarborough) தீ விபத்து – 4 நாய்கள் மீட்பு, 3 நாய்களைக் காணவில்லை!

கனடாவின் றொரண்டோ, ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள தனி வீடு ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய நான்கு நாய்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், மேலும் மூன்று நாய்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லஸ்மியர் வீதி (Ellesmere Road) மற்றும் ஸ்கார்பாரோ கோல்ப் கிளப் வீதி (Scarborough Golf Club Road) சந்திப்புக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே மாலை 4:00 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வீட்டின் பின்புறத்திலிருந்து பலத்த தீப்பொறிகள் கிளம்பியதை அடுத்து, றொரண்டோ தீயணைப்புப் பிரிவினர் (Toronto Fire Services – TFS) விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்தின் போது வீட்டில் இருந்த இரு குடியிருப்பாளர்கள் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக வெளியேறியுள்ளனர்.

எனினும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காணாமல் போயுள்ள மற்றைய மூன்று செல்லப் பிராணிகளும் தீ விபத்தின் போது வீட்டை விட்டு வெளியேறி, அக்கம் பக்கத்து பகுதிகளில் ஓடித்திரிந்திருக்கலாம் என தற்காலிக மாவட்டத் தலைவர் பிராட் குட்வின் (Brad Goodwin) தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles