மெக்சிகோவில் (Mexico) கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்ட 10 சுரங்கத் தொழிலாளர்களில் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக வான்கூவரை (Vancouver) தளமாகக் கொண்ட விஸ்லா சில்வர் கார்ப்பரேஷன் (Vizsla Silver Corp.) உறுதிப்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் சினாலோவா (Sinaloa) மாநிலத்தில் உள்ள பானுகோ (Panuco) தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கத்தில் பணியாற்றிய இத்தொழிலாளர்கள் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர்.
சுரங்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கோனெர்ட் (Michael Konnert), இந்த முடிவு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கடந்த பெப்ரவரி மாதம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடத்தப்பட்டவர்களில் இன்னும் ஒரு தொழிலாளர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதுடன், அவர் குறித்த தகவல்களை அறிய அவரது குடும்பத்தினருடன் நிறுவனம் தொடர்பில் உள்ளது.
சினாலோவா (Sinaloa) போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை மெக்சிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் கனடியர்கள் எவரும் இல்லை என்பதை கனடா உலக விவகார அமைச்சு (Global Affairs Canada) ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கப்போவதாக சுரங்க நிறுவனம் அறிவித்துள்ளது.










