FIFA உலகக் கிண்ணப் போட்டிகள் – கனடியர்களுக்குப் பொலிசார் அவசர எச்சரிக்கை!

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் FIFA உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் நெருங்கி வருகிறது.

அதனுடன் இணைந்ததாக கூறி பாரிய பண மோசடிகள் குறித்து கனடிய மோசடி எதிர்ப்பு மையம் (CAFC) மற்றும் பொலிசார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக போட்டிகள் நடைபெறவுள்ள டொராண்டோ (Toronto) மற்றும் வான்கூவர் (Vancouver) ஆகிய நகரங்களில் இவ்வாறான மோசடிகள் அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

போட்டிக்கான போலி நுழைவுச்சீட்டுகள் (Tickets), தங்குமிட வசதிகள் (Short-term rentals) மற்றும் போலியான விளையாட்டு உபகரணங்களின் விற்பனை ஆகியவற்றின் ஊடாகப் பணத்தைத் திருடுவதற்கு மோசடிக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விலையில் நுழைவுச்சீட்டுகளைத் தருவதாகக் கூறுவது, வருகைக்கு முன்னரே முழுப் பணத்தையும் வைப்புச் செய்யக் கோருவது போன்றவை மோசடியின் அறிகுறிகள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூன் 11-ஆம் திகதி தொடங்கவுள்ள இந்த 48 அணிகள் பங்கேற்கும் தொடரில், கனடாவில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் டொராண்டோவில் 6 போட்டிகளும், வான்கூவரில் 7 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான FIFA இணையத்தளங்கள் ஊடாக மட்டுமே நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், சந்தேகத்திற்குரிய விளம்பரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles