கனடிய இராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு (EV) தடை விதிக்கப்பட வேண்டும் எனப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வாகனங்களில் உள்ள சென்சார்கள் மற்றும் கமெராக்கள் மூலம் முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே போலந்து (Poland) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் BYD போன்ற சீன நிறுவனங்களின் வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளதாக துறைசார் நிபுணர் டெனிஸ் மோலினாரோ (Dennis Molinaro), சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் கனடாவும் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவியர் (Pierre Poilievre) மற்றும் ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டு (Doug Ford) ஆகியோரும் இந்த “உளவு கார்கள்” (Spy cars) குறித்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty) மற்றும் இராணுவத் தளபதி ஜெனி காரிக்னன் (Gen. Jennie Carignan), இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு, மலிவு விலை சீன வாகனங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கை அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.










