டொராண்டோ (Toronto) நகரில் இயங்கும் Lakeshore East GO Train புகையிரதத்தில் பயணம் செய்த இருவரை வழிமறித்துத் தாக்கி, கொள்ளையிட்ட விவகாரத்தில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணிந்திருந்த இரண்டு 14 வயதுச் சிறுவர்கள் மற்றும் ஒரு 16 வயதுச் சிறுவன் அடங்கிய கும்பல், புகையிரதத்தில் இரண்டு பயணிகளைத் பின்தொடர்ந்துள்ளது.
அச்சமடைந்த ஒரு பயணி புகையிரதக் கழிவறைக்குள் தஞ்சம் புகுந்தபோதும், புகையிரதம் Rouge Hill GO நிலையத்தை வந்தடைந்ததும் வெளியே வந்த அவரை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
பயணிகளிடமிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட பின், அவர்களைப் புகையிரதத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு பயணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த மூன்று சிறுவர்களையும் கைது செய்து அவர்கள் மீது கொள்ளை முயற்சி மற்றும் கடுமையான உடல் ரீதியான தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) படி இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.










