17 மில்லியன் டொலர் போதைப்பொருள் கடத்தல் – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிராம்ப்டன் நபர்!

பிராம்ப்டனைச் சேர்ந்த 62 வயதுடைய குரம்ரித் சித்து (GuramritSidhu) என்பவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டொலர் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஒரு பாரிய குற்றவியல் கும்பலை வழிநடத்தியதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

2020 செப்டம்பர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில், அமெரிக்காவிலிருந்து மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) மற்றும் கொக்கைன் (Cocaine) ஆகிய போதைப்பொருட்களைப் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் அவற்றை லொரிகள் மூலம் கனடாவிற்குள் கடத்தி விநியோகித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சர்வதேச கடத்தல் கும்பலில் மாண்ட்ரியலைச் சேர்ந்த இத்தாலிய மாபியா தொடர்புடைய ராபர்டோ ஸ்கோப்பா (Roberto Scoppa) உட்பட 19 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள குரம்ரித் சித்துவுக்கான தண்டனை விபரங்கள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளன.

அவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வழக்கில் ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்ட பிற நபர்களுக்கு 27 முதல் 108 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles