கனடா போஸ்ட் (Canada Post) நிறுவனம் தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், வீடுகளுக்கே நேரடியாகத் தபால் விநியோகம் செய்யும் முறையை (Door-to-door delivery) படிப்படியாக நிறுத்த தீர்மானித்துள்ளது.
அதற்குப் பதிலாக பொதுவான தபால் பெட்டிகள் (Community mailboxes) மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சுமார் ஒன்பது ஆண்டுகளில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டம், முதற்கட்டமாக நான்கு ஆண்டுகளில் பெரும்பகுதி மாற்றங்களைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் நான்கு மில்லியன் முகவரிகளுக்கு நேரடி வீட்டு விநியோகம் நடைபெற்று வருகின்றனர்.
இப்புதிய மாற்றத்தினால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, பனிப்பொழிவு காலங்களில் தபால் பெட்டிகளை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து டொராண்டோ நகரசபை உறுப்பினர் ஜொஷ் மேட்லோ (Josh Matlow) உள்ளிட்டோர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த மாற்றத்தின் கீழ், சிறிய பொதிகள் பொதுவான தபால் பெட்டிகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்படும். கையெழுத்துத் தேவைப்படும் பெரிய பொதிகள் மட்டுமே வழமை போல வீடுகளுக்கோ அல்லது தபால் நிலையங்களுக்கோ கொண்டு செல்லப்படும்.
நேரடி விநியோகம் நிறுத்தப்படுவதால் தேவையற்ற விளம்பரத் தாள்கள் (Junk mail) குப்பைகளாகச் சேரும் அபாயம் குறித்தும், அவற்றை அகற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கனடா போஸ்ட் அதிகாரிகளுடன் உள்ளூராட்சி மன்றங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
