கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள மளிகைக் கடைகளில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் ‘கண்காணிப்பு விலை‘ (Surveillance Pricing) முறையைத் தடை செய்ய நகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் இணைய தேடல் வரலாறு, அவர்களின் சம்பள நாள் போன்ற தனிப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் இந்த நடைமுறைக்கு எதிராக, றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Mayor Olivia Chow) முக்கிய முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொள்கை ஆராய்ச்சியாளர் எமிலி ஆஸ்போர்ன் (Emily Osborne), “சந்தையின் தேவைக்கேற்ப விலையை மாற்றும் ‘டைனமிக் பிரைசிங்‘ (Dynamic Pricing) முறையை விட இது முற்றிலும் வேறுபட்டது.
இது நுகர்வோரைச் சுரண்டும் செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடைகளில் உள்ள மின்னணு விலை அட்டைத் திரைகள் (RFID Electronic Labels) மூலமாக இந்த வில மாற்றங்கள் ரகசியமாக செய்யப்படுவதாகவும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் கர்மி லெவி (Carmi Levy) மற்றும் பேராசிரியர் டான் கோஹன் (Dan Cohen) ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே மேனிடோபா (Manitoba) மற்றும் கியூபெக் (Quebec) ஆகிய மாகாணங்கள் இத்தகைய நியாயமற்ற விலை நிர்ணயங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்நிலையில், றொரண்டோ நகரமும் தற்போது இக்கட்டுப்பாட்டைக் கொண்டுவரத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
