மத்திய கிழக்கு போரினால் – கனடிய விவசாயிகளுக்கு நெருக்கடி! – உரங்களின் விலை உயர்வால் கலக்கம்!

கனடாவின் சஸ்காட்சுவான் (Saskatchewan) மாகாணம் பொட்டாஷ் மற்றும் விவசாய உற்பத்தியில் முன்னணியில் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் உள்ளூர் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடியுள்ளதால், எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பொட்டாஷ் உற்பத்தியில் கனடா முக்கிய பங்கு வகித்தாலும், விவசாயத்திற்குத் தேவையான நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது.

உலக யூரியா வர்த்தகத்தில் 40 சதவீதமும், கந்தக (Sulfur) வர்த்தகத்தில் 50 சதவீதமும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

இந்தப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், வசந்த கால பயிர்ச்செய்கை காலத்தில் உரங்களின் விலை மற்றும் தட்டுப்பாடு அதிகரிக்கும் என விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (APAS) துணைத் தலைவர் கிறிஸ் புரோசிக் (Chris Procyk) எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே கனோலா, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளுக்கான வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த இடுபொருட்களின் (Input costs) விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக Nutrien மற்றும் The Mosaic Company போன்ற உர உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இலாப வரம்பு ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், இந்த உலகளாவிய அரசியல் மோதல்கள் கனடிய விவசாயத் துறையில் பெரும் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Latest Articles