கனடாவின் Toronto நகரில், நிறுத்து சைகையை (Stop Sign) மதிக்காமல் சென்றதாகக் கூறி, சைக்கிள் ஓட்டிய ஒருவரை பொலிஸார் ஓடிச்சென்று தரையில் தள்ளி, மிகவும் ஆக்ரோஷமாகக் கைது செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Martin Goodman Trail பகுதியில் மே 31 அன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. Queen’s Quay West மற்றும் Little Norway Crescent சந்திப்பில் சைக்கிள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்கிறார்களா என்பதை றொரண்டோடோ பொலிஸார் (Toronto Police) கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றுள்ளார்.
பொலிஸார் அவரை நிறுத்துமாறு உத்தரவிட்டும், அவர் பொலிஸாரை நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு தப்பியோட முயன்றதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மூன்று அதிகாரிகள் அந்த இளைஞரைத் துரத்திப் பிடித்து, பலவந்தமாகத் தரையில் தள்ளி விலங்கிட்டனர்.
இந்தச் சம்பவத்தின்போது தன் மீது என்ன தவறு என்று அந்த இளைஞர் கத்திக் கேட்க, “நீ நிறுத்தவில்லை” என்று அதிகாரி ஒருவர் பதிலளிக்கும் சத்தம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த இளைஞர் மீது போக்குவரத்து சட்டத்தின் கீழ் (Highway Traffic Act) மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போக்குவரத்து விதியை மீறியதற்காக ஒருவரை இவ்வாறு தரையில் தள்ளி ஆக்ரோஷமாகக் கைது செய்தது தேவையற்ற மற்றும் மிக மோசமான ஒரு நடவடிக்கை என ’The Biking Lawyer’ அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி David Shellnut கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.










