உலகின் மிகப்பெரிய எண்ணெய் படிமங்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும் பாரியத் திட்டம் கிரீன்லாந்தின் (Greenland) கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஜேம்சன் லேண்ட் (Jameson Land) எனும் இடத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இத் திட்டத்தில் கனடிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டெக்சாஸைத் தளமாகக் கொண்ட Greenland Energy Co. நிறுவனம் இந்த இரண்டு கிணறுகளின் அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கனடாவின் ஸ்டாம்பீட் ட்ரில்லிங் (Stampede Drilling Inc.) மற்றும் டெஸ்காக்னே (Desgagnés) ஆகிய நிறுவனங்களும் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
கல்கரியைச் சேர்ந்த ஸ்டாம்பீட் ட்ரில்லிங் (Stampede Drilling) நிறுவனம் தனது அதிநவீன துளையிடும் கருவிகளை முதன்முறையாக சர்வதேசத் திட்டத்திற்காக கிரீன்லாந்திற்கு அனுப்பவுள்ளது.
அதேபோல், கியூபெக்கைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான டெஸ்காக்னே (Desgagnés), மொன்றியலுக்கு அருகிலுள்ள போர்ட் ஆப் வேலி பீல்ட் (Port of Valleyfield) துறைமுகத்திலிருந்து தேவையான அனைத்து தளபாடங்களையும் ஆர்க்டிக் கடல் வழியாகக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளது.
சுமார் 13 பில்லியன் பேரல்கள் எண்ணெய் வளம் இங்கு இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது அலாஸ்காவின் பிரம்மாண்ட எண்ணெய் வயல்களுக்கு இணையானது என Greenland Energy தலைமை அதிகாரி ராபர்ட் பிரைஸ் (Robert Price) தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து அரசு புதிய எண்ணெய் அகழ்வுகளுக்குத் தடை விதித்திருந்தாலும், 2021 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இந்த பழைய உரிமங்களின் கீழ் அகழ்வுப் பணிகள் சட்டப்பூர்வமாக நடைபெறவுள்ளன.
இத்திட்டம் கிரீன்லாந்து மக்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
