கனடாவின் றொரண்டோவில் (Toronto) காணாமல் போன எஸ்தர் (Esther – Esti) என்ற 17 வயது சிறுமியைப் பாதுகாப்பாகக் கண்டுபிடிப்பதற்குக் காரணமான தகவல்களை வழங்குவோருக்கு 25,000 டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அச்சிறுமி தொடர்பான தேடுதல் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டிசம் (Autism) குறைபாட்டைக் கொண்ட எஸ்தர், கடந்த மே 16 அன்று நள்ளிரவு பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஹாட்ஸ்பர் ரோடு (Bathurst Street and Hotspur Road) பகுதியில் கடைசியாகக் காலணிகள் இன்றி காணப்பட்டார்.
அவரைத் தேடும் பணியை றொரண்டோ பொலிஸார் தங்களின் மிக உயரிய ‘லெவல் 1’ (Level 1) நிலைக்கு உயர்த்தி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஃபேவுட் பொலிவார்ட் (Faywood Boulevard) மற்றும் ஜார்விஸ் ஸ்ட்ரீட் (Jarvis Street) உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த தேடுதல் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன சிறுமியின் போஸ்டர்களைக் கிழிப்பது மிகவும் கொடூரமானது என்றும், தற்போதைய சூழ்நிலையில் இது யூத எதிர்ப்பு (Antisemitism) நோக்கமாக இருக்கலாம் என அஞ்சுவதாகவும் குடும்பப் பேச்சாளர் மௌரீன் லேஷெம் (Maureen Leshem) தெரிவித்துள்ளார்.
எஸ்தர் 5 அடி 2 அங்குல உயரம், பழுப்பு நிற தலைமுடி கொண்டவர் என்றும், சாம்பல் நிற காற்சட்டை மற்றும் டர்க்காய்ஸ் (Turquoise) நிற சுவெட்டர் அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
