கனடாவின் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக, GST வரியை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என C.D. Howe Institute நிறுவனத்தின் புதிய அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிடும் இலக்கை எட்டுவதற்கு இத்தகைய கடினமான நிதி முடிவுகள் அவசியம் என ஆய்வாளர்களான கொலின் பஸ்பி (Colin Busby) மற்றும் நிக்கோலஸ் தாஹிர் (Nicholas Dahir) தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, கனடாவின் வருடாந்த பாதுகாப்புச் செலவினம் 2026 இல் 50 பில்லியன் டொலரிலிருந்து, 2035 ஆம் ஆண்டளவில் 150 பில்லியன் டொலராக அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
GST வரியை 2 சதவீதம் உயர்த்துவதன் மூலம் அரசுக்கு மேலதிகமாக 25 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) காலத்தில் 1.5 சதவீதமாக இருந்த பாதுகாப்புச் செலவினம், தற்போது நேட்டோ (NATO) நிர்ணயித்த 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அதிகரித்து வரும் அரச கடன் மற்றும் முதியோர் தொகை பெருக்கம் போன்ற காரணிகளால், வரிகளை உயர்த்தாமல் அல்லது ஏனைய பொதுச் செலவுகளைக் குறைக்காமல் இராணுவ இலக்குகளை அடைவது கடினம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
