கனடாவில் வீட்டு உபயோக நிதிக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் ஓரளவுக்குச் சீராகத் தெரிகிறது.
இருப்பினும், ஆழமாகப் பார்க்கும்போது பல கனடியர்கள் கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Goeasy Ltd. போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் கடந்த மாதம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்திருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.
அதன்படி, 2025 இல் நுகர்வோர் வங்குரோத்து நிலை 140,457 ஆக உயர்ந்துள்ளது. இது 2009 க்கு பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
கடன் அட்டைகள், கார் கடன்கள் மற்றும் இதர தவணைக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும், வீட்டு உரிமையாளர்கள் ஓரளவுக்குச் சமாளித்தாலும், வாடகைக்கு வசிப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்கள் அதிக நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.
குறிப்பாக, ஒன்டாரியோ (Ontario) மற்றும் பி.சி (B.C.) மாகாணங்களில் இத்தாக்கம் மிக அதிகமாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததே பலர் கடனில் சிக்கக் காரணமாகியுள்ளதாகக் கிரெடிட் கனடா (Credit Canada) தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பதும் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
அதனால், கடன் வழங்கும் நிறுவனங்களும் தற்போது தங்கள் விதிமுறைகளைக் கடுமையாக்கி, கடன் வழங்குவதைக் குறைத்துள்ளன.
மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் வீட்டு உரிமையாளர்களுக்குச் சிறு ஆறுதலை அளித்தாலும், அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட ‘சப்-பிரைம்‘ (Sub-prime) கடன் வாங்குபவர்களுக்கு அது பெரிய அளவில் உதவவில்லை.










