டொராண்டோவின் எக்லிண்டன் லைன் 5 (Eglinton Line 5) உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) முதல் அதன் சேவை நேரம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
புதிய மாற்றத்தின்படி, சனிக்கிழமைகளில் நள்ளிரவு 12:30 மணி வரையிலும், ஞாயிறு முதல் வெள்ளி வரை அதிகாலை 1:20 மணி வரையிலும் ரயில் சேவை நீடிக்கப்படும் என டிடிசி (TTC) மற்றும் மெட்ரோலின்க்ஸ் (Metrolinx) அறிவித்துள்ளன.
ரயில்கள் அதிக நெரிசல் மிக்க நேரங்களில் (Peak hours) ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும், ஏனைய நேரங்களில் 6 முதல் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
இரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை ‘ப்ளூ நைட்‘ (Blue Night) பஸ் சேவைகள் வழக்கம் போலத் தொடரும்.
கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எல்ஆர்டி (LRT) சேவையானது, தற்போது சிக்னல் உள்கட்டமைப்புகள் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து அடுத்த கட்ட விரிவுபடுத்தலுக்குத் தயாராகியுள்ளது.
மார்ச் நடுப்பகுதியிலிருந்து இந்தப் பாதையில் போக்குவரத்து சிக்னல் முன்னுரிமை (Traffic signal priority) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்ஆர்டி ரயில்கள் வாகனங்களுக்கு முன்பாகச் சந்திப்புகளைக் கடக்க முடிவதுடன், பயண நேரம் மிகவும் நம்பகமானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மாதங்களில் மேலும் பல மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










