ஒன்டாரியோவின் சென். கெத்தரিনஸ் (St. Catharines) மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை கிடைக்காமல் 24 வயதான பழங்குடியின யுவதி ஹெதர் வின்டர்ஸ்டைன் (Heather Winterstein) உயிரிழந்தார்.
அவரின் மரண விசாரணை (Coroner’s Inquest) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது தாய் பிரான்சின் ஷிமிசு-ஓர்கர் (Francine Shimizu-Orgar), “விசாரணையில் சமர்ப்பித்த சாட்சியங்களைக் கேட்டால் நான் அடைந்த அதே ஆத்திரத்தை நீங்களும் அடைவீர்கள்” என எச்சரித்துள்ளார்.
கடந்த 2021 டிசம்பரில், கடுமையான முதுகுவலியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஹெதருக்கு வெறும் டைலெனால் (Tylenol) மாத்திரை மட்டுமே வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், அது “சமூகப் பிரச்சினைகளால்” ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தரையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு செப்சிஸ் (Sepsis) எனப்படும் இரத்த நச்சுத்தன்மை கலந்த தீவிரத் தொற்று பாதிப்பே காரணம் எனப் பின்னர் கண்டறியப்பட்டது.
இந்தச் சம்பவம் கனடிய சுகாதாரத் துறையில் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பாரபட்சமான அணுகுமுறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
நயாகரா ஹெல்த் (Niagara Health) நிர்வாகம் இந்த மரணத்தை ஒரு “பேரிடர்” என ஏற்றுக்கொண்டதோடு, ஊழியர்களுக்குக் கலாசார பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
