அல்பெர்ட்டாவில் பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் DEI நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர புதிய சட்டமூலம்!

கனடாவின் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில், பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) சார்ந்த கொள்கைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டமூலத்தை அரசு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து மாகாணத்தின் முதலமைச்சர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களின் பணி நியமனங்கள் தகுதி மற்றும் திறமையின் (Merit) அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் எனவும், அப்போதுதான் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் மிக்கி அமேரி (Mickey Amery) தாக்கல் செய்த இந்த சட்டமூலம், பொது முகாமைகள், அரசு நிறுவனங்கள் (Crown corporations), உயர்கல்வி நிறுவனங்கள், பாடசாலை சபைகள் மற்றும் நகராட்சிகளுக்கும் பொருந்தும்.

மேலும், கட்டாய DEI பயிற்சிகளைத் தடை செய்வதுடன், ஊழியர்களுக்கான ஏனைய பயிற்சிகள் அரசியல் மற்றும் கருத்தியல் நடுநிலைமையுடன் அமைவதை இது உறுதி செய்கிறது.

இதன் மூலம் அல்பெர்ட்டா மனித உரிமைகள் சட்டத்திலும் (Alberta Human Rights Act) மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை அனுமதியின்றிப் பகிர்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் $10,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles