அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரிகளுக்குப் பதிலடியாக, கனடாவில் அமெரிக்க மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் உள்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
ஒன்டாரியோவின் ஒக்வில் (Oakville, Ont.) பகுதியில் உள்ள மேவரிக் டிஸ்டிலரி (Maverick Distillery) நிறுவனத்தின் வொட்கா விற்பனை 100 சதவீதமும், விஸ்கி விற்பனை 300 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிரெய்க் பீட்டர்ஸ் (Craig Peters) தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் ஒன்டாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பல மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளன.
“உலகிலேயே மதுபானங்களை அதிகளவில் கொள்வனவு செய்பவர்கள் நாங்கள்தான்; எமது தடையால் அவர்கள் பாதிப்பை உணர்வார்கள்” என ஒன்டாரியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்திருந்தார்.
இந்தத் தடையால் கனடிய தயாரிப்புகளை வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளதாகத் தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் திடீர் தேவையால் மேவரிக் டிஸ்டிலரி நிறுவனம் தனது உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
இருப்பினும், இந்த வர்த்தகப் போர் ஒட்டுமொத்தமாக கனடியர்களுக்கு நல்லதல்ல என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் சிக்கல்கள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கிரெய்க் பீட்டர்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஒட்டாவா (Ottawa) மற்றும் வாஷிங்டன் (Washington) இடையே மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
