மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 17 பேர் கைது!

கனடாவின் பீல் (Peel) பிராந்தியத்தில் தெற்காசிய வணிகர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) சம்பவங்கள் தொடர்பாக 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிராம்ப்டன் (Brampton), கலிடன் (Caledon) மற்றும் மிசிசாகா (Mississauga) ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், லொறி நிறுவனங்கள் போன்ற தெற்காசிய வணிகங்களை இலக்கு வைத்து இந்த வன்முறைகள் நடந்துள்ளன.

FBI, CBSA, OPP மற்றும் Surrey Police Service ஆகியவற்றுடன் இணைந்து கடந்த டிசம்பர் 2025 இல் தொடங்கப்பட்ட இந்த கூட்டு விசாரணையின் மூலம் மொத்தம் 106 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பணம் தராமல் மறுத்த வணிகர்களின் நிறுவனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தீவைப்புச் சம்பவங்களை ஏற்படுத்தியும் இந்த கும்பல் மிரட்டியுள்ளது என பீல் பிராந்திய காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah) தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் குறைந்தது 16 வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையது.

இந்த குற்றப்பின்னணி பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அமெரிக்கா மற்றும் இந்தியா வரை நீண்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு இந்தியாவில் நடந்த கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புள்ளது.

மேலும், எல்லையோர பாதுகாப்புப் படையினரால் (CBSA) மேலும் 6 பேர் தடுத்து வைக்கப்பட்டு, சிலர் ஏற்கனவே கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு பீல் பிராந்தியத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மூலம் சுடப்பட்ட 620 குண்டுகளில், தோராயமாக பாதியளவிற்கு இந்த குற்றக் குழுவே காரணம் என துணைத் தலைவர் நிக் மிலோனோவிச் (Nick Milonovich) குறிப்பிட்டுள்ளார்.

சோதனையின் போது 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களில் முக்கியமாக ஈடுபட்டு வந்த ‘Four Brothers Gang’ என்றழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த கும்பலை நோக்கி விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக டிடெக்டிவ் பிரையன் லோரெட் (Brian Lorette) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles