மலிவு விலை சூப்பர்மார்க்கெட்டாக மாறும் டொராண்டோவின் ‘மெட்ரோ’ அங்காடி!

cp24

டொராண்டோவின் (Toronto) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல மெட்ரோ (Metro) சூப்பர்மார்க்கெட், குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ‘ஃபுட் பேசிக்ஸ்‘ (Food Basics) அங்காடியாக மாற்றப்படவுள்ளது.

1230 குவீன் ஸ்ட்ரீட் வெஸ்ட் (1230 Queen St. W.) முகவரியில் உள்ள இந்த மெட்ரோ கிளை மூடப்பட்டு, 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபுட் பேசிக்ஸ் அங்காடியாக மீண்டும் திறக்கப்படும் என மெட்ரோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாடிக்கையாளர்களின் மலிவு விலை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒன்டாரியோ (Ontario) மாகாணம் முழுவதும் உள்ள தனது 12 மெட்ரோ கடைகளை ‘ஃபுட் பேசிக்ஸ்‘ ஆக மாற்ற மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாடிக்கையாளர் உரிமைகள் மற்றும் வணிக ஆலோசகரான டேனியல் ட்ஸாய் (Daniel Tsai) இது குறித்துக் கூறுகையில், “பொருளாதார நெருக்கடி காலங்களில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் அங்காடிகளுக்கே அதிக வரவேற்பு இருக்கும்.

எனவே, பெரிய நிறுவனங்கள் தங்களின் சந்தைப் பங்கைத் தக்கவைத்துக் கொள்ளவும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோரைக் கவரவும் இத்தகைய rebranding உத்தியைக் கையாண்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து உண்மையான விலை குறைப்பைக் கொண்டுவர வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous article‘மேடே’ (Mayday) கனடியத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து விமானத்தைக் கட்டுப்படுத்திய பயணி!
Next articleகனடாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினம் – அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தகவல்!