கனடாவின் அல்பெர்டா மாகாணத்தையும் அமெரிக்காவின் மொன்டானா (Montana) மாநிலத்தையும் இணைக்கும் 14 கிலோமீட்டர் நீளமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பார்டர் ரோட்‘ (Border Road) வரும் கோடைக் காலம் முதல் கனடியர்களுக்கு மூடப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் கீழ், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மொன்டானா பகுதியில் அமைந்துள்ள இந்த வீதியைப் பராமரிக்கும் பொறுப்பை அல்பெர்டா மாகாணமே முன்னெடுத்து வருகிறது.
எல்லையின் இருபுறமும் வசிக்கும் விவசாயிகள் முதல் பல தலைமுறைகளாக எவ்வித தடையுமின்றி இந்த வீதியைப் பயன்படுத்தி வந்தனர்.
1990 இல் நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) இதழால் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு உதாரணமாகச் சித்தரிக்கப்பட்ட இந்த வீதி, தற்போது ஒரு புதிய தடையாக மாறவுள்ளது.
இந்த மூலோபாய மாற்றத்தினால், அல்பெர்டா மக்கள் பயன்படுத்துவதற்காகக் கனடிய எல்லைக்குள் சுமார் 8 மில்லியன் டொலர் செலவில் ஒரு புதிய இணை வீதி அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு கோடைக் காலத்திற்குள் நிறைவடையும் என அல்பெர்டா போக்குவரத்து அமைச்சர் டெவின் ட்ரீஷன் (Devin Dreeshen) தெரிவித்துள்ளார்.
“இது ஒரு முட்டாள்தனமான முடிவு” என எல்லையோர மக்கள் கவலை தெரிவித்துள்ள போதிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
