கனடாவின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் கடிகார முட்கள் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.
பருவ மாற்றத்தின் அடையாளமாக இது பார்க்கப்பட்டாலும், தூக்கமின்மை மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
யோர்க் பல்கலைக்கழக (York University) பேராசிரியர் Patricia Lakin-Thomas, இந்த நேர மாற்றத்தினால் வீதி விபத்துகள் மற்றும் இதய பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், சஸ்காட்சுவான் (Saskatchewan) மற்றும் யூகோன் (Yukon) பகுதிகளில் நேர மாற்றம் கடைபிடிக்கப்படுவதில்லை.
பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) முதல்வர் David Eby, இனி நிரந்தரமாகக் கோடைகால நேரமே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார்.
மறுமுனையில், ஆல்பர்ட்டா (Alberta) முதல்வர் Danielle Smith இது குறித்து மக்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோ (Ontario) அரசு ஏற்கனவே இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும், கியூபெக் (Quebec) மற்றும் நியூயார்க் (New York) ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
1918-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரப் பல மாகாணங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன.
