கனடாவின் கல்கரி (Calgary) நகரில் புதிய நீர் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் (Water restrictions) அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, நகர மக்கள் தங்களது நீர் நுகர்வைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.
Bearspaw South Feeder Main முக்கிய நீர் குழாயின் இறுதிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பணிகள் சுமார் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர நிர்வாகத்தின் தரவுகளின்படி, புதன்கிழமை கல்கரியின் மொத்த நீர் பயன்பாடு 490 மில்லியன் லீட்டராகப் பதிவாகியுள்ளது.
இது நகரின் பாதுகாப்பான பயன்பாட்டு இலக்கான 500 மில்லியன் லீட்டருக்கும் குறைவாக (பச்சை மண்டலத்தில்) உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தங்களது வெளிப்புற நீர் பயன்பாட்டைக் முற்றிலுமாகத் தவிர்க்குமாறும், பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் இயந்திரங்களை முழுமையாக நிரப்பி மட்டுமே இயக்குமாறும், கழிப்பறை பயன்பாட்டைக் குறைத்து குளிக்கும் நேரத்தை 3 நிமிடங்களுக்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வெளிப்புற நீர் தடை காரணமாக, WinSport நிறுவனத்தின் செயற்கைப் பனி உருவாக்கும் (snowmaking) பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.










