மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான எரிபொருள் (Jet Fuel) விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, ஏர் கனடா (Air Canada) மற்றும் ஏர் டிரான்சாட் (Air Transat) போன்ற முன்னணி நிறுவனங்கள் லாபமற்ற பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
ஏர் கனடா ஜூன் 1 முதல் டொராண்டோ – ஜேஎப்கே (JFK) மற்றும் மொன்றியல் – ஜே எப் கே இடையிலான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது.
மேலும், வான்கூவர் – போர்ட் மெக்முர்ரே (Fort McMurray) மற்றும் டொராண்டோ – யெல்லோநைப் (Yellowknife) போன்ற உள்நாட்டு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்க விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை உயர்த்துவதுடன், கூடுதல் எரிபொருள் கட்டணங்களையும் (Fuel surcharge) அறவிடத் தொடங்கியுள்ளன.
டல்ஹவுசி பல்கலைக்கழக (Dalhousie University) பேராசிரியர் லோர்ன் ஷீஹான் (Lorn Sheehan) கூறுகையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், எரிபொருள் விநியோகம் சீராகவும் விலை குறையவும் பல மாதங்கள் வரை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோடைகால பயணங்களை மேற்கொள்பவர்கள் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும், பயணக் காப்பீடுகளை (Travel insurance) உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










