2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் றொரண்டோவில் (Toronto) எவ்வித முன்னறிவிப்புமின்றி இரண்டு அந்நியர்களைச் சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் எட்வின் (Richard Edwin) என்பவருக்கு, 25 ஆண்டுகளுக்குப் பரோல் அற்ற ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செனெகா கல்லூரியின் (Seneca College) மாணவரான 21 வயது கார்த்திக் வாசுதேவ் (Kartik Vasudev) மற்றும் எலிஜா மஹேபாத் (Elijah Mahepath) ஆகிய இருவர் எவ்வித தூண்டுதலுமின்றி எட்வினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை (Planned and deliberate) என நீதிபதி ஜேன் கெல்லி (Justice Jane Kelly) உறுதிப்படுத்தினார்.
கொலையாளிக்கு மனநல பாதிப்பு (Schizophrenia) இருந்தபோதிலும், தனது செயலின் தீய விளைவுகளை அவர் அறிந்திருந்தார் எனக் கூறி, அவரின் தண்டனையைக் குறைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
கார்த்திக் வாசுதேவ் ஷெர்போர்ன் (Sherbourne) ரயில் நிலையத்திற்கு அருகே வேலையிலிருந்து திரும்பியபோது கொல்லப்பட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பின் எலிஜா மஹேபாத் இதே முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
“தனது மகனுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருந்து நீதியைப் பெற்றுள்ளேன்” என கார்த்திக்கின் தாயார் பூஜா கண்ணீருடன் தெரிவித்தார்.
எட்வின் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய போதிலும், “எங்கள் மகனைப் பறித்த பின் இந்த மன்னிப்பினால் பயன் ஏதுமில்லை” என கார்த்திக்கின் தந்தை ஜிதேஷ் (Jitesh) அதனை நிராகரித்தார்.










