றொரண்டோவின் மிட்லாண்ட் அவென்யூ (Midland Avenue) பகுதியில் அமைந்துள்ள ‘சன்னி ஹாபிஸ்‘ (Sunny Hobbies) என்ற வணிக நிலையத்தில், அதிகாலையில் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 36,000 டொலர் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20 அன்று அதிகாலை 4:45 மணியளவில், கடையின் முன்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மூன்று நபர்கள், அங்கிருந்த விலைமதிப்பயுற்ற டிரேடிங் கார்டுகள் மற்றும் பொருட்களைச் சூறையாடினர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்கள் மிக வேகமாகப் பொருட்களை அள்ளிச் செல்வது அந்த 46 வினாடி வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடையின் உரிமையாளர் சன்னி ஹுவாங் (Sunny Huang), இந்தச் சம்பவத்தால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை; காப்புறுதி நிறுவனங்களுடன் பேசுவதும், பாதுகாப்பை மேம்படுத்துவதுமே பெரும் வேலையாக உள்ளது” என அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் $36,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடை ஒரு வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த போதிலும், திட்டமிட்டே இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாக ஹுவாங் கருதுகின்றனர்.
றொரண்டோ பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
