புற்றுநோய் மருந்துக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதி வழங்க மறுப்பதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரொறன்ரோவைச் சேர்ந்த ஹொலி வார்ட்லோ (Holly Wardlow) என்ற பெண் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், மிகவும் அரிதான வகை பித்தநாளப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரது உயிரைக் காப்பாற்ற உதவக்கூடிய மருந்துக்கு மாதமொன்றுக்கு 78 ஆயிரம் கனேடிய டொலர் செலவாகிறது.
இதுவரை தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவிட்டு, சுமார் ஐந்து இலட்சம் டொலரை சிகிச்சைக்காகச் செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துக்கான செலவை ஏற்குமாறு ஒன்ராறியோ அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பித்த போதிலும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் என்ன?
கனடாவில் முழுமையான அங்கீகாரம் பெறாத மருந்துகளுக்கான அரச நிதியுதவியைக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறையை ஒன்ராறியோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம் இல்லாவிட்டால், மாகாண சுகாதாரக் காப்புறுதித் திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 5.2 பில்லியன் டொலர்கள் வரை கூடுதல் செலவு ஏற்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஹொலி வார்ட்லோவின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
ஏற்கனவே எட்டு சுற்றுகள் கீமோதெரபி மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சைகளைப் பெற்றிருந்த போதிலும், புற்றுநோய்க் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதற்குப் போதுமான அளவு குறைக்க முடியவில்லை.
எனினும், குறித்த மருந்தைப் பயன்படுத்திய பின்னர், கட்டியின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற முடிந்தால், அறுவைச் சிகிச்சைக்கான வாய்ப்பு உருவாகலாம் என்று மருத்துவர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், சிகிச்சையைத் தொடர்வதற்கான பணம் தீர்ந்துவருவதாக ஹொலி கவலை தெரிவித்துள்ளார்.
உயிரைக் காப்பாற்றக்கூடிய மருந்துக்கான நிதியுதவி கிடைக்காத நிலையில், ஹொலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
