நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன கனேடியர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை கனடா தீவிரப்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கு உதவுவதற்காக 10 கனேடிய அதிகாரிகள் நேபாளில் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கனேடியர்களை கண்டறிந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவது தமது முதன்மையான நோக்கம் என அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுவரை தொடர்பு இல்லாமல் இருந்த கனேடியர் ஒருவர் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். எனினும், இன்னும் 30 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் உள்ளூர் காவல்துறை, மருத்துவமனைகள், மீட்பு நிலையங்கள், விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களுடன் கனேடிய அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சீனா, நேபாளம் மற்றும் பல சர்வதேச நாடுகளுடனும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேவேளை, நேபாளத்தின் அவசர மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கு 5 மில்லியன் கனேடிய டொலர் உதவியை கனடா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.










