நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 25 கனேடியர்கள் காணாமற்போயுள்ளதாக Nepal Tourism Board தெரிவித்துள்ளது. காணாமற்போன கனேடியர்கள் 36 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
மலைப்பகுதிகளில் trekking சென்றவர்கள் மற்றும் திபெத்தின் புனித Mount Kailash பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்தப் பேரழிவில் சிக்கியுள்ளனர்.
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளைச் சேர்த்து 1,300-க்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதுடன், 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் மட்டும் 517 வெளிநாட்டவர்கள் காணாமற்போயுள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போனவர்களைத் தேடும் பணிகளில் நேபாள மற்றும் சீன மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சேதமடைந்த வீதிகள், துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் மீட்புப் பணிகளை கடுமையாகப் பாதித்துள்ளன.
கனேடிய வெளிவிவகார அமைச்சு, பிராந்தியத்திலுள்ள கனேடியர்களின் நிலை குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தகவல்களைத் திரட்டி வருவதாகவும், தேவையான தூதரக உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கனேடிய பிரதமர் Mark Carney-யும் நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
காணாமற்போன 25 கனேடியர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ஆரம்பத்தில் இந்தப் பேரழிவு நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், முதலில் ஏற்பட்டது மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு; அந்தச் சரிவே நிலஅதிர்வு போன்ற தோற்றத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்தே பாரிய நீர், சேறு மற்றும் பாறைகள் ஆற்றில் பாய்ந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.










