Edmonton-ல் இரண்டு நாய்கள் தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், நாய்களின் உரிமையாளருக்கு நீதிமன்றம் வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது.
46 வயதான Crystal MacDonald, குற்றவியல் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்த குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 11 வயதான Kache Grist, விடுமுறைக்காக Edmonton-ல் தனது தந்தையை சந்திக்க வந்திருந்தார்.
அப்போது Crystal MacDonald-க்கு சொந்தமான இரண்டு பெரிய Cane Corso நாய்கள் சிறுவனை வீட்டிற்குள் தாக்கின.
கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் Kache உயிரிழந்தார்.
இந்த நாய்களுக்கு இதற்கு முன்பும் மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது தாக்குதல் நடத்திய வரலாறு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய ஆபத்தான நாய்களிடமிருந்து சிறுவனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை MacDonald மேற்கொள்ளவில்லை என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்த வழக்கில் Crown தரப்பு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியிருந்தது.
ஆனால் MacDonald-க்கு இரண்டு ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் 200 மணிநேர community service மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நாய்களை வைத்திருப்பது, பராமரிப்பது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க முடியும்.
