கல்கரியில் உள்ள ஒரு விவசாய சந்தையில் கோர்டன் ஃபொன்டைன் தனது கடையில் பாரம்பரிய இத்தாலிய உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறார். பிரதானமாக, ஒலிவ் எண்ணெய், பால்சாமிக் balsamic வினிகர், மற்றும் பாஸ்தா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், தனது தொழில் வளர்ச்சிக்கு கார்பன் வரி ஒரு சவாலாக உள்ளதாக கூறுகிறார்.
“இது எங்கள் லாபத்தை நேரடியாக பாதிக்கிறது, எங்கள் சமையலில் எரிவாயு பயன்படுத்துகிறோம், எங்கள் பொருட்களை விநியோகிக்கவும் எரிவாயுவே தேவை.” என அவர் தெரிவித்தார்.
கனடாவின் அரசியல் சூழலில், கார்பன் வரி முக்கிய விவாதமாக இருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சி இதை முழுமையாக ரத்து செய்ய வாக்களித்த நிலையில், புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது முதல் அரசியல் நடவடிக்கையாக ஏப்ரல் 1 முதல் நுகர்வோருக்கான கார்பன் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால், தொழில்துறை கார்பன் வரி தொடர்ந்து அமலில் இருக்கும்.
எரிவாயு விலையானது, களஞ்சிய விலையில் ஒரு லிட்டருக்கு சுமார் 19 சென்ட் வரை குறையலாம் என ‘Canadians for Affordable Energy’ தலைவர் டேன் மெக்டீக் (Dan McTeague) தெரிவித்தார்.
ஆனால், ஏப்ரல் 1-க்குப் பிறகு கோடை கால எரிபொருள் மாற்றம் காரணமாக 6 சென்ட் வரை மீண்டும் அதிகரிக்கும் என்பதால், இந்த நன்மை குறையலாம்.
நுகர்வோருக்கான கார்பன் வரியை நீக்குவதில் லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், தொழில்துறை கார்பன் வரி குறித்தும் பெரிய நிறுவனங்களுக்கான விதிகளை நீக்குவது பற்றியும் அவர்களுக்கு ஒன்றுபட்ட கருத்தில்லை.
தொழில்துறை கார்பன் வரியானது, எதை நோக்கமாகக் கொண்டது என்ற கேள்விக்குப் பதிலளித்த கல்கரி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் பிளேக் ஷாஃபர் (Blake Shaffer), “இது பெரிய உற்பத்தியாளர்கள், எண்ணெய் திரவியங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பெரிய எரிபொருள் பயன்படுத்தும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.” என்றார்.
லிபரல் கட்சி இந்த வரியை வைத்திருக்க விரும்புகிறது, ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி இதை ரத்து செய்யவும், அதன் பதிலாக சுத்த தொழில்நுட்ப வரிச்சலுகைகளை (clean technology tax credits) அதிகரிக்கவும் முன்மொழிக்கிறது.
Clean Energy Canada-வின் இயக்குநர் மார்க் சகாரியாஸ் (Mark Zacharias) கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், கார்பன் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆகவே, தொழில்துறை கார்பன் வரி கனடாவை போட்டியில் மேலே நிறுத்த உதவும்.” என்றார்.
இப்போது, ப்ரின்ஸ் எட்வர்ட் ஐலந்து (Prince Edward Island), மனிடோபா (Manitoba), நுனாவுட் (Nunavut), யுகோன் (Yukon) ஆகிய மாகாணங்கள் மட்டுமே கூட்டாட்சி தொழில்துறை கார்பன் வரிக்குள் உள்ளன. மற்ற மாகாணங்கள் தனித் தனியாக தங்கள் விதிகளை அமைத்துள்ளன.
அரசியல் மாற்றங்கள் கார்பன் வரியை நீக்கலாம், ஆனால் இதன் பாதிப்பு சாதாரண மக்களுக்கு அதிகம் இல்லை என பேராசிரியர் ஷாஃபர் கூறுகிறார்.
தொழில்துறையில் இவ்வகை கட்டுப்பாடுகள் இருக்கும்போது, பெரிய நிறுவனங்கள் கார்பன் மாசுபாட்டின் அளவை குறைக்க முயற்சிக்கும்.