வடமேற்கு Ontario பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அங்குள்ள Collins First Nation (Namaygoosisagagun) என்ற பழங்குடியின சமூகத்தின் உறைவிடங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதன் தலைவர் Helen Paavola உறுதிப்படுத்தியுள்ளார்.
“தீப்பிழம்புகள் எகிறி குதித்தன, அது மிகவும் பயமாக இருந்தது” என்று தீயில் இருந்து தகரப் படகு (Tin boat) மூலம் தப்பிய 13 வயது சிறுவன் Chance Paavola தெரிவித்துள்ளான்.
இந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாததால், மக்கள் தங்களால் முடிந்த பொருட்களை படகுகளில் ஏற்றிக்கொண்டு ஏரி வழியாக தப்பி ஓடியுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒட்டுமொத்த சமூகமும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலைமை அதிகாரி கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இப்பகுதியில் சுற்றுலா சென்ற Texas-ஐச் சேர்ந்த David Ogle மற்றும் Kevin Stovall ஆகிய இரு நண்பர்கள், சாம்பல் மழை மற்றும் அடர்ந்த புகைக்கு மத்தியில் சிக்கி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த Wabakimi Wilderness Lodge முற்றிலும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் 63 காட்டுத்தீக்கள் கட்டுப்பாடின்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
