டப்ளின் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police Service – DRPS) பிரிவைச் சேர்ந்த பயிற்சி பொலிஸார் (constable-in-training) இருவர் பயணித்த கார், லொறி (transport truck) ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பயிற்சி காவலர் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின், அய்ல்மர் (Aylmer) பகுதிக்கு அருகில் உள்ள மலாஹைட் (Malahide) நகரியத்தில் அமைந்துள்ள ஒன்றாரியோ பொலிஸ் கல்லூரிக்கு (Ontario Police College) பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளதாக டப்ளின் பொலிஸ் தலைமை அதிகாரி பீட்டர் மோரேரா (Peter Moreira) தெரிவித்துள்ளார்.
இம்பீரியல் வீதி (Imperial Road / Highway 73) மற்றும் கல்லூரி வீதி (College Line) சந்திப்பில் நேற்று முற்பகல் 11:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இக்கோர விபத்தில் டிராக்டர்-டிரெய்லர் லொறியின் ஓட்டுநர் எவ்வித காயங்களுமின்றி தப்பியதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் (OPP) அதிகாரி ஜெப் பியூமாஸ்டர் (Jeff Beaumaster) குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும், சக பயிற்சி பொலிஸாரும் தேவையான முழுமையான ஆதரவும் நிதியுதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒன்றாரியோ மாகாண பொலிஸார் (OPP) மேற்கொண்டு வருகின்றது.










