கனடாவின் ஒன்ராறியோ பிளேஸ் (Ontario Place) பகுதியில், 400 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பில் அமையவுள்ள புதிய ‘ஒன்ராறியோ அறிவியல் மையத்திற்கான‘ (Ontario Science Centre) கட்டுமானப் பணிகளை மாகாண அரசு உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
400,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த அதிநவீன அறிவியல் மையம், வரும் 2029 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது.
இதில் புதுப்பிக்கப்பட்ட முனையங்கள், கூடுதல் அரங்குகள் மற்றும் முந்தைய OMNIMAX திரையரங்கை விட இரண்டு மடங்கு அதிக ஆசனங்களைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட சினிஸ்பியர் (Cinesphere) திரையரங்கு ஆகியவை இடம்பெறவுள்ளன.
றொரண்டோவின் (Toronto) அழகிய கடற்கரைப்பகுதியில் அமையவுள்ள இந்த மையம், அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அடையாளமாக மாறும் என்றும், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை இது ஈர்க்கும் என்றும் ஒன்ராறியோ முதலமைச்சர் டக் போர்ட் (Premier Doug Ford) தெரிவித்துள்ளார்.
டான் மில்ஸ் வீதியில் (Don Mills Road) 1969 முதல் இயங்கி வந்த பழைய அறிவியல் மையத்தின் கூரைப்பகுதி இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பொறியியல் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, கடந்த ஜூன் 21, 2024 அன்று மாகாண அரசால் அது திடீரென மூடப்பட்டது.
புதிய மையம் திறக்கப்படும் வரை, இது ஹார்பர்பிரண்ட் மையத்தில் (Harbourfront Centre) தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த ஒன்ராறியோ பிளேஸ் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானக் காலத்தில் 5,700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) 420 மில்லியன் டாலர் பங்களிப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவியல் மையமானது, எதிர்கால ஒன்ராறியோ லைனின் (Ontario Line) எக்சிபிஷன் நிலையத்திற்கு (Exhibition Station) மிக அருகில் அமையவுள்ளது.
இதன் கட்டுமான ஒப்பந்தம் ‘ஹரிரி பொன்டாரினி ஆர்க்கிடெக்ட்ஸ்‘ (Hariri Pontarini Architects) உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய ‘ஒன்ராறியோ சயின்ஸ் பார்ட்னர்ஸ்‘ (Ontario Science Partners) குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
