ஒண்டாரியோ மின்சார வாகன திட்டத்தை நிறுத்தியது ஹொ​ண்டா நிறுவனம் – 1,000 புதிய வேலைவாய்ப்புகள் கேள்விக்குறி!

ஒண்டாரியோவின் (Ontario) அலிஸ்டன் (Alliston) பகுதியில் அமைக்கப்படவிருந்த புதிய மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலைத் திட்டத்தை காலவரையறையின்றி நிறுத்திவைப்பதாக ஹோண்டா கனடா (Honda Canada) அறிவித்துள்ளது.

மாறிவரும் சந்தை நிலவரங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் தேவை குறைந்துள்ளதால், தனது உலகளாவிய மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்து இத்திட்டத்தை நிறுத்துவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் அலிஸ்டனில் (Alliston) உருவாக்கப்படவிருந்த சுமார் 1,000 புதிய வேலைவாய்ப்புகள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.

இந்த முடிவு தற்போதுள்ள வேலைகளையோ அல்லது உற்பத்தியையோ பாதிக்காது என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இங்கு தற்போது சிவிக் (Civic) மற்றும் சிஆர்-வி (CR-V) கலப்பின (Hybrid) மாடல்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்.

கூட்டாட்சி மற்றும் ஒண்டாரியோ அரசாங்கங்கள் இத்திட்டத்திற்கு நிதி வழங்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எந்தப் பொதுப் பணமும் பரிமாறப்படவில்லை என ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் கனடாவில் சுமார் 400,000 வாகனங்களை ஹோண்டா உற்பத்தி செய்துள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹைப்ரிட் வாகனங்களாகும்.

சந்தையில் மின்சார வாகனங்களுக்கான மந்தநிலை காணப்படுவதால், எதிர்காலத் தேவைகளைக் கண்காணித்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles