எட்டோபிகோக் Etobicoke-இல் உள்ள ஒரு தொழிற்சாலை பேக்கரியில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட மூன்று அடுக்கு (3-alarm) பெரும் தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Carlingview Drive பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் உள்ள அடுப்பு (Oven) ஒன்றில், மாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தபோது, கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகையுடனும், கூரை வரை தீப்பிழம்புகளுடனும் காணப்பட்டது.
அதிக வெப்பம் மற்றும் காற்றின் தரம் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டதாக டிவிஷன் கமாண்டர் Robert Hewson தெரிவித்தார்.
தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் இருந்த சுமார் 50 ஊழியர்களும் பத்திரமாக வெளியேறினர். கூரையில் மீண்டும் தீப்பொறிகள் உருவாவதைத் தடுக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
