கனடாவின் Oshawa நகரில் மதச் சடங்கு நடத்துவதற்காக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இந்து பண்டிதர் ஒருவர், பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
Durham Regional Police தெரிவித்துள்ளதன்படி, Harmony Road North மற்றும் Conlin Road East பகுதிக்கு அருகில் பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும், தங்களது வீட்டில் மதச் சடங்கு ஒன்றை நடத்துவதற்காக New York-ஐ சேர்ந்த, “Pandit” என அழைக்கப்படும் இந்து மதகுரு ஒருவரை அழைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் குற்றச்சாட்டின்படி, அந்த பண்டிதர் குறித்த பெண்ணிடம், அவரை “தீய ஆவிகள் ஆட்கொண்டுள்ளன” என்றும், அதிலிருந்து குணமடைய தனிப்பட்ட இடமொன்றில் விசேட மதச் சடங்கு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அந்தச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த பெண் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் New York மாநிலம் Richmond Hill பகுதியைச் சேர்ந்த 50 வயதான Rajendranauth Doodnauth Maraj என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர் அல்லது இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் Crime Stoppers ஊடாக அடையாளம் வெளியிடாமல் தகவல் வழங்கலாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










