டொராண்டோ மற்றும் GTA பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறப்பு வானிலை அறிவிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த வார இறுதியில் டொராண்டோ உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து, சில இடங்களில் மேலதிகமாக 20 முதல் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என Environment Canada எச்சரித்திருந்தது. தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கும் அபாயமும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த சிறப்பு வானிலை அறிவிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், திங்கட்கிழமையும் டொராண்டோவில் மழைக்கான வாய்ப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழை பெய்வதற்கான வாய்ப்பு சுமார் 60 சதவீதமாக உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 20 பாகை செல்சியஸ் வரை இருக்கும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.
ஆனால் செவ்வாய்க்கிழமை முதல் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வெயிலுடன் 25பாகை, புதன்கிழமை 26 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். புதன்கிழமை இரவு மீண்டும் சிறிதளவு மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது.
வியாழக்கிழமை மீண்டும் மேகமூட்டத்துடன் 40 சதவீத மழை வாய்ப்பும், சுமார் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மழையுடன் ஆரம்பமாகும் இந்த வாரம், செவ்வாய் புதன்கிழமைகளில் வெயிலான வானிலைக்கு மாறவுள்ளது.
