‘Simple Investor’ நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தம் : ஒன்ராறியோவில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்குப் பெரு அதிர்ச்சி!

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் ‘Simple Investor’ என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் வாங்கிய சொத்துகளுக்கான வாடகை நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பிரபல ஊடகவியலாளரும் ரியல் எஸ்டேட் முகவருமான டாட் சி. ஸ்லேட்டர் (Todd C. Slater) நடத்தி வரும் ‘The Simple Investor’ மற்றும் அதன் சொத்து நிர்வாக நிறுவனமான ‘Sireg’ ஆகியவை $100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை நிர்வாகம் செய்து வருகின்றன.

சந்தை சவால்கள் மற்றும் பணப்புழக்க நெருக்கடி காரணமாக உரிய காலத்தில் வாடகை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ‘Sireg’ நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

1,800 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் அடமானக் கடன்களை (Mortgage) எவ்வாறு செலுத்துவது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து டாட் சி. ஸ்லேட்டரை (Todd C. Slater) தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் காலவரையற்ற மருத்துவ விடுப்பில் (Medical Leave) இருப்பதாகத் தானியங்கி மின்னஞ்சல் பதில் வந்துள்ளது.

லண்டன் (London) நகரக் கட்டிடத்தில் சுடுநீர் வசதி இல்லாமை, புரோக்வில் (Brockville) கட்டிடத்தில் மின்தூக்கி (Elevator) இயங்காமை எனப் பல பராமரிப்புப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து இணையதளம் வாயிலாகவும் வங்கிகள் மூலம் கடன்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்தும் தீர்வுகளைத் தேடி வருகின்றனர்.

Related Articles

Latest Articles