Scarborough McDonald’s-ல் 15 வயது இரட்டையர்களுடன் பொலிஸ் மோதல்

Scarborough-வில் உள்ள McDonald’s ஒன்றில் 15 வயதுடைய இரட்டையர்கள் சாதாரண உடையில் இருந்த Police அதிகாரிகளால் கைது செய்யப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ஆம் திகதி Victoria Park Avenue மற்றும் Ellesmere Road பகுதியில் உள்ள McDonald’s-க்கு, தங்களது கைபேசிகளை charge செய்வதற்காக தனது மகனும் மகளும் சென்றிருந்ததாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார்.

அப்போது சாதாரண உடையில் இருந்த இருவர் அவர்களை அணுகியதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தங்களை பொலீஸ் அதிகாரிகள் என தெளிவாக அடையாளப்படுத்தவில்லை என தனது பிள்ளைகள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், சாதாரண உடையிலிருந்த அதிகாரி ஒருவர் சிறுமியின் முகத்தில் தாக்குவது போன்ற காட்சியும், பின்னர் அவரை உணவகத்திற்குள் தள்ளுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.

பொலிஸ் தரப்பு தகவலின்படி, அந்தப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் திருட்டு சம்பவம் ஒன்றை விசாரிக்க அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.

Uniform அணிந்த அதிகாரிகள் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், குறித்த இரட்டையர்கள் peace officer-ஐ தாக்கியதாக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவர்கள் மீது இறுதியில் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தனது மகளுக்கு தாடைப் பகுதியில் வலி, காயம் ஏற்பட்டதாகவும், அவரது கண்ணாடி உடைந்ததாகவும் கூறிய தந்தை சட்ட நடவடிக்கையை பரிசீலித்து வருகிறார்.

இதற்கிடையில் Toronto Police, சம்பவ வீடியோவை Professional Standards பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles